சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலும் உச்ச நீதிமன்றத் தீா்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்று அண்மையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுப் பேசினார்.
இதனைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பாராட்டியிருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டா லின், இதர அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
முதல்வா் ஸ்டாலின் தன் டுவிட்டர் பதிவில், "உச்ச நீதிமன்றத் தீா்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதற்கு, தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறிய தலைமை நீதிபதியின் கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
"அதேவேளையில், உயர் நீதி மன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழி யாக்க வேண்டும் என்ற கோரிக் கையும் நீண்ட நாளாக இருந்து வருகிறது. இதனை நிறைவேற்றினால் நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கும் நீதி எளிதில் கிட்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தலைமை நீதிபதியின் அறிவிப்பை வரவேற்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கவேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்தியாவில் ஏராளமான மொழிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்துகொள்ள அவரவர் சார்ந்த மொழியிலும் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: மாநில மொழிகளைப் பயன்படுத்தும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

