திருவள்ளூர்: அமர்வதற்கு நாற்காலிகளை எடுத்துவர தாமதமானதால் கோபம் அடைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது கற்களை எடுத்து வீசினார். இந்தக் காணொளி சமூகவலைத் தளங் களில் வேகமாகப் பரவியது.
திருவள்ளூர் அருகே உள்ள வேடங்கிநல்லூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை அமைச்சர் நாசர் பார்வையிடச் சென்றார்.
அப்போது, கட்சி நிர்வாகிகள் அமர்வதற்கு அங்கு நாற்காலிகள் போடப்படாததால் தொண்டர்களிடம் அவர் ஆத்திரத்தை வெளிக்காட்டிய விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாற்காலிகள் எடுத்து வருவ தற்கு தாமதமானதால் தொண்டர்கள் மீது அவர் கற்களை வீசுகிறார். நாசருடன் இருந்த திமுக பிரமுகர்கள் சிலர் பின்னணியில் சிரிப்பது காணொளியில் ஒலிக்கிறது.
இந்தக் காணொளியை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "இந்திய வரலாற்றில் ஓர் அமைச்சர் மக்கள் மீது கல் எறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
'திமுகவைச் சேர்ந்த அமைச்சர் நாசர்தான் இப்படிச் செய்கிறார். கொஞ்சம் கூட நாகரிகம் இல்லை," என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
நாற்காலிகள் போடாத காரணத்துக்காக ஆத்திரம் அடைந்து ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

