சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட் பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவ னுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதர வளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அறிவித்தார்.
தன் குடும்பத்தில் நிகழ்ந்த துயரத்தையும் தாண்டி சேவை செய்ய களமிறங்கியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை தான் முழு மனதுடன் ஆதரிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அத் தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து, திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சி களின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், இதர கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இந்நிலையில், மநீம கட்சியின் நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்.
அப்போது, "ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறேன்.
"வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய நானும் கட்சியினரும் பாடுபடுவோம்," என்றார்.
இதனிடையே, தேர்தலில் பாஜக போட்டியிடத் தயாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அண்ணா மலைக்குச் சவால் விட்டுள்ளார்.
"கூட்டணியில் அதிமுகவே பெரிய, வலுவான கட்சியாக உள்ளது. பாஜகவின் பலத்தை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை," என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் வேறு வேறு வேட்பாளர்களைப் போட்டு நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்றும் அவர் கேட்டுள்ளார்.
"அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம். ஒரு பெரிய மனிதன் நல்லது சொன்னால் அதைக் கேட்கவேண்டும் அல்லவா?" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

