500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்
விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டும் சித்ரா. படம்: ஊடகம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அமைச்சர் சி வி கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டுவதற்கு ஏதுவாக ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுவதாகக் கூறினார். இதற்காகத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
நீலகிரியில் ஹெலிகாப்டர் சுற்றுலா
கோவை: ஏற்காடு, வால்பாறையைப் போல் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "30 பேர் அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில் உதகை ஏரியில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பிறந்த நாள் உட்பட பல்வேறு விழாக்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்படும். அதே போல், நீலகிரியில் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை தொடங்கவும் ஆய்வு நடத்தப்பட உள்ளது," என்றார்.
மாணவி பலியான வழக்கில் கைதான எட்டு பேரும் விடுதலை
செங்கல்பட்டு: தாம்பரத்தில் கடந்த 2012ல் தனியார் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழி கீழே விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கின் தொடர்பில் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2012 ஜூன் 25ல் நடந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி காயத்ரி தீர்ப்பு வழங்கினார்.
மயில்களுக்கு சரணாலயம் அமைக்க கோரிக்கை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்கவேண்டும் என பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் விவசாய அணியின் திட்டப் பொறுப்பாளர் அண்ணாதுரை ஆட்சியரிடம் அளித்த மனுவில், மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் மயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, தேசிய பறவையான மயிலுக்கு சரணாலயம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

