குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய பிளாஸ்டிக் பொருள் அகற்றம்
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியைச் சேர்ந்த ஏழு மாதப் பெண் குழந்தைக்கு திடீரென இருமலுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையை நாடினர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த காது, மூக்கு, தொண்டைப் பிரிவு மருத்துவர்கள் அதன் மூச்சுக் குழாயில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருள் (படம்) சிக்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர். மூச்சுக்குழாய் உள்நோக்கிக் கருவி மூலம் அறுவை சிகிச்சை இன்றி அதை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு கமல் ஆதரவு
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் கூறியிருக்கிறார். கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் ஆகியவற்றின் நிறைவில் அவர் இதனைத் தெரிவித்தார். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றிக்குத் தாமும் தமது கட்சியினரும் உதவுவோம் என்றும் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்றும் கமல் கூறினார். ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரையில் அவரது கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
மதுரையில் முறைகேடாக ரயில் பயணச்சீட்டு விற்ற 90 பேர் கைது
மதுரை: மதுரை பிரிவுக்கான ரயில்வே பாதுகாப்புப் படையினர், மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில், ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்பனை செய்த 90 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.15.44 லட்சம் மதிப்புள்ள பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பொருள், மதுபானங்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்றோர்மீதும் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடமிருந்த சட்டவிரோதப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அபகரிக்கப்பட்ட ரயில்வே சொத்துகள் மீட்கப்பட்டன. ரயில்வே விதிகளை மீறியோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. வீட்டில் கோபித்துக்கொண்டு ரயிலேறிய 230 சிறார்கள் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அரசுப் பள்ளியில் ஆசிரியரை தாக்கிய அண்ணன், காப்பாற்றிய மாணவர்கள்
விழுப்புரம்: சொத்துத் தகராறு காரணமாக அரசுப் பள்ளியில் புகுந்து ஆசிரியரை வெட்டிய அவரது அண்ணனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் கோடங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மூத்தமகனான ஸ்டாலின் ஒரு விவசாயி. இளைய மகன் நடராஜன் கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஒரு வாரத்துக்கு முன்னர் தந்தை இறந்ததையடுத்து சகோதரர்களுக்குள் சொத்துத் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தம்பியை அவர் பணிபுரியும் பள்ளியின் நுழைவாயிலில் கத்தியால் முதுகில் குத்தினார் ஸ்டாலின். உயிர்பிழைக்க நடராஜன் பள்ளிக்குள் ஓடியபோது மாணவர்கள் அண்ணனைப் பிடித்து நிறுத்தியதாகவும் தகவலறிந்து காவல்துறையினர் வருமுன்னர் மாணவர்கள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

