சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வட்டாரத்தில் வசிக்கும் ஷோபா துரைராஜனின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பிடிபட்டுள்ளன.
சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஷோபா துரைராஜன் வீட்டில் 10 பழங்காலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தச் சிலைகள் சுமார் 400 ஆண்டுகள் பழமையானவை. அனைத்தும் ஐம்பொன் சிலைகள். அவற்றின் மதிப்பு கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது.
விசாரணையில், சிலைகளை மறைந்த சிலை கடத்தல்காரர் தீனதயாளனிடம் இருந்து வாங்கியதாகக் கூறினார் ஷோபா.
சிலைகளை விற்பனை செய்வது தனது நோக்கம் இல்லை என்று கூறிய அவரிடம் சிலைகளை வாங்கியதற்கான முறையான ஆவணங்கள் இருந்தன. இதனால் அவர்மீது தற்போது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை கூறியது.
ஆனால் பழமையான சிலைகள் என்பதால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சிலைகள் எங்கிருந்து திருடப்பட்டன என்பது குறித்துக் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

