திரையிட முயன்ற மாணவர்கள், கைப்பேசியில் பார்த்த பெண் கவுன்சிலர் கைது
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பிபிசி ஊடகம் வெளியிட்ட ஆவணப் படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. எனினும் தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்தில் ஆவணப் படத்தை திரையிட மாணவர்கள் முயற்சி மேற்கொண்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை அடிப்படையாக வைத்து பிபிசி ஊடகம் ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை மறுத்துள்ள மத்திய அரசு, ஆவணப் படத்துக்கு தடையும் விதித்தது.
எனினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தத் தடை மீறப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஆவணப் படத்தை திரையிடுவது தொடர்பாக மாணவர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆவணப் படத்தை தங்களுடைய கைப்பேசிகளில் பார்க்க முயன்றவர்கள் மீது கல்வீச்சு நடந்தது.
சில மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலை வளாகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதை அறிந்த பல்கலை நிர்வாகம் அத்திரையிடலுக்கு அனுமதி மறுத்தது.
எனினும் தடையை மீறி மாணவர்கள் சிலர் ஆவணப் படத்தை பல்கலை வளாகத்தில் திரையிட்டனர்.
முன்னதாக, திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஏற்பாட்டில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னையில் மாநிலக் கல்லூரி விடுதியிலும் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி, எம்.சி. ராஜா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவணப் படத்தை வெளியிட மாணவர்கள் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட ஆவணப் படத்தை தங்கள் கைப்பேசிகளில் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களும் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் வீதிதோறும் கொண்டு சேர்க்கப் போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இச்சங்கத்தைச் சேர்ந்த பலர் சாலையோரங்களில் அமர்ந்து பிபிசி ஆவணப் படத்தைப் பார்த்தனர்.

