செய்திக்கொத்து

2 mins read

அமமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவபிரசாந்த் களமிறக்கப்படுவார் என பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இடைத் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்த பின்னர் தாம் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்துவிட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை: தேவகோட்டை அருகே உருவாட்டி கிராமத்தில் மனக்குடி கண்மாயை ஒட்டிய பகுதியில் முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள், இரும்பை உருவாக்கும் கசடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை என்றும் பானைகளை கலைநயத்துடன் வடிவமைத்துள்ளதைப் பார்க்கும்போது இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நாகரிக, பண்பாட்டுடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது என்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் ஆய்வு நடவடிக்கை பணிகள் நீடித்து வருகின்றன.

நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமிக்கள் அமைக்க அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் அந்த மையங்கள் அமைக்கப்படும் என்றும் விளையாட்டுத் துறையில் இளையர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் இம்மையங்கள் செயல்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிறை நூலகத்துக்கு பல்வேறு தரப்பினர் வழங்கிய 4,540 புத்தகங்கள்

மதுரை: சிறையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்காக பல்வேறு அமைப்புகள் 4,540 புத்தகங்களை வழங்கி உள்ளன. இதன் மூலம் கைதிகள் இடையே வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும் என்றும் அது அவர்களை நல்வழிப்படுத்தும் என்றும் மதுரை சிறைத்துறைத் தலைவர் பழனி தெரிவித்துள்ளார். கைதிகள் விரும்பிய புத்தகத்தை தங்களின் அறைகளில் வைத்துப் படிக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மதுரை மத்திய சிறையில் 1,600க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனர். சிறை நூலகத்துக்காக லட்சம் புத்தகங்களைத் திரட்டுவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் டிஜிபி பழனி கூறினார்.