சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தங்களுக்கு அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, ஜனவரி 30ஆம் தேதியன்று மனுவைத் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியது.
மேலும், இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் முன்பு அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க முயற்சி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
அதிமுகவின் இரு அணிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் பழனிசாமி. தனது அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வமும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு வழக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்கள் வழங்கிஉள்ள ஆலோசனையின்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் பழனிசாமி. இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை முறையிடும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.
திங்கட்கிழமை தங்களுடைய மனுவை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என எதிர்பார்ப்பதாக பழனிசாமி தரப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க முயற்சி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் பணிக்காக தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார் பழனிசாமி. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் இடம்பெற்றுள்ளனர்.


