திருப்பூர்: தமிழகத் தொழிலாளர் ஒருவரை வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாகச் சென்று விரட்டியடித்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
இதனால் தமிழக இளையர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேலம்பாளையம் பகுதியில் தமிழகத் தொழிலாளர் ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அப்பகுதியில் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிலர், அருகே உள்ள கடைக்கு வந்து புகைபிடித்துள்ளனர். அப்போது தமிழகத் தொழிலாளர் ஒருவருக்கும் வடமாநிலத் தொழிலாளருக்கும் திடீரென வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்து வேகமாகச் சென்ற வடமாநிலத் தொழிலாளர், சற்று நேரத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் திரும்பி வந்துள்ளார்.
அதன் பின்னர், தமிழகத் தொழிலாளரை அவர்கள் கும்பலாகத் தாக்கியுள்ளனர். உருட்டுக்கட்டை, இடுப்புப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு தமிழகத் தொழிலாளர் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அமைதி ஏற்படுத்தினர்.
இந்நிலையில், தமிழகத் தொழிலாளர் தாக்கப்படுவது தொடர்பான காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
அவற்றைக் கண்டு ஆவேசமடைந்த தமிழக சமூக ஆர்வலர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத் தொழிலாளர் என்ன காரணத்துக்காக தாக்கப்பட்டார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் காணொளிப் பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படுவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

