கரூர்: இம்மாதம் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி, ஒருபுறம் சென்னையில் கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மற்றொருபுறம் நடந்த விழா வில், அதிக அளவில் மதுவை விற்பனை செய்து வருவாய் ஈட்டிய நான்கு பணியாளர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
ஏன் இந்த முரண்பாடு? தமிழ்நாட்டின் இலக்குதான் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச் சாராய ஒழிப்பு, மது விற்பனை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு விருது வழங்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி யதை அடுத்து கரூர் நிர்வாகம் அதைத் திரும்பப் பெற்றுள்ளது.
இந்திய குடியரசு நாளில், பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் கடைப்பிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது.
'டாஸ்மாக்' மதுக் கடைகளில் மது விற்பனை செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இத்தகைய மோசமான சூழலில் இருந்து தமிழக மக்களைக் காக்க தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதாக அரசு அறிவிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
'டாஸ்மாக்' கடையில் சிறப்பாக சரக்கு விற்றவருக்கு குடியரசு தினத்தில் சிறப்பு விருது என்ற வாசகத்துடன், வடிவேலு படத்தைப் போட்டு 'விற்பவர்களுக்கு மட்டும்தானா? அதிகமாக குடிக்கும் எங்களுக்கு எப்போது ஐயா விருது கொடுப்பீர்கள்?' என 'மீம்ஸ்'கள் போட்டு கேலி செய்ததால், மாவட்ட மேலாளர், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என நால்வருக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் (கேடயம் திரும்பப் பெறப்படவில்லை) மாவட்ட நிர்வாகத்தால் திரும்பப்பெறப்பட்டன.

