செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a3088e21-a500-467a-b098-e2004e13baad
-

குட்கா மீதான தடை நீக்கத்திற்கு எதிராக அரசு மேல்முறையீடு

சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு கடந்த 2006ல் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் விதித்திருந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

'ெஜயலலிதா, சசிகலாவுக்கு

உண்மையாக இல்லாதவர் பழனிசாமி'

சென்னை: ஜெயலலிதா, சசிகலா உட்பட பழனிசாமி யாருக்கும் உண்மையாக இருந்தது கிடையாது என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எடப்பாடியில் நடைபெற்ற பொற்கிழி வழங்கும் விழாவில் அவர் பேசியபோது, "ஒரு குறை கூட சொல்லமுடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதால், எதிர்க்கட்சியினர் தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனர்," என்று கூறியுள்ளார்.

'மண்ணும் மரபும்' கண்காட்சி

கண்காட்சிக்கு வந்திருந்த மாணவிகள் ரேக்ளா வண்டியை ஓட்டிப் பார்த்து மகிழ்ந்தனர். படம்: ஊடகம்

சென்னை: தமிழர் பெருமைகளைப் போற்றும் 'மண்ணும் மரபும்' கண்காட்சி சென்னை எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று வரை நடைபெறுகிறது. தமிழர் பாரம்பரியம் குறித்து இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கவும் கிராமப்புறங்களின் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அரிய வகை மூலிகைகள், வேளாண் பொருள்கள், சித்த மருத்துவ முகாம், நெல் மற்றும் மரபு விதைகள், பாரம்பரிய உணவு வகைகள், மண்பாண்டம் தயாரிப்பு, பழமையான இசை, போர்க் கருவிகள், பாரம்பரிய விளையாட்டுகள், பனைப் பொருள்கள் காட்சியகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.