சென்னை: சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த பழமையான கட்டடத்தை இடிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் பத்ம பிரியா என்ற இளம்பெண் உயிரி ழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டடத்தை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி கட்டட உரிமையாளருக்குச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மறு உத்தரவு வரும்வரை அங்கு வேறு எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நோட்டீஸ் அளித்துள்ளது.
"முன் அனுமதி பெற்றுத்தான் கட்டடத்தை இடித்துள்ளனர். எனினும், பாதுகாப்பு விதிமுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாகப் பின்பற்றாமல் கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது," என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பழைய கட்டடத்தை 'பொக்லைன்' இயந்திரம் மூலம் இடித்துக்கொண்டிருந்த போது, அந்தக் கட்டடம் மேலிருந்து சரிந்ததில் பக்கவாட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த பத்மபிரியா, 22, உயிரிழந்தார்.
இதையடுத்து, இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகரன், ஓட்டுநர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய மூவரையும் காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர், பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.
"பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்," என்று கூறியுள்ள சென்னை மேயர் பிரியா, இதுபோன்ற விபத்துகள் இனியும் நடக்காமல் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த பாண்டி முருகேசன் என்பவரின் மகளான பத்மபிரியா, 22, எம்சிஏ படித்துவிட்டு விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கடந்த டிசம்பா் மாதம்தான் மென்பொறியாளராகப் பணியில் சோ்ந்திருந்தார்.

