பழனி: முருகப்பெருமானின் 3ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் திருவிழாக்களிலேயே தைப்பூசத் திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகப் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் தைப்பூசத் திருவிழா நேற்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர் களுக்குக் காட்சியளித்தார்
முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 4ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாலில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்ச்சியும் மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
பிப்ரவரி 5ம் தேதி திருக்கல்யாணமும் அன்று இரவு சாமி வீதி உலாவும் நடைபெறும். பிப்ரவரி 7ஆம் தேதி தெப்பத்தேர் உற்சவசத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
இதற்கிடையே தைப்பூசத் திரு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனிக்கு மீண்டும் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு அதிக அளவில் வந்தனர்.
அண்மையில்தான் பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குட முழுக்கு நடைபெற்றது.

