ஊட்டி: ஊட்டி மலை ரயிலை முழுமையாக ரூ.3.60 லட்சத்திற்கு (S$5,800) வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு பயணிகள் உற்சாகமாகப் பயணம் செய்தனர்.
குன்னூர், நீலகிரி மாவட்டத்தின் பெருமைக்குரிய ஊட்டி மலை ரயில், ஆசியாவிலேயே பல் சக்கர தண்டவாளத்தில் ஓடும் ரயிலாகும்.
இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரியத் தகுதியை வழங்கியுள்ளது.
இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் ரூ.3.60 லட்சம் பணத்தைக் கட்டி இந்த மலை ரயிலை நேற்று முன்தினம் வாடகைக்கு எடுத்தனர்.
காலை 10 மணிக்கு கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இந்த மலை ரயில் புறப்பட்டது. இதில் 16 பேர் கொண்ட குழு மட்டுமே பயணம் செய்தது. குகை, பாலம், வன விலங்குகள், இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு உற்சாகமாக அக்குழுவினர் பயணம் செய்தனர். மதியம் 1.30 மணி அளவில் ரயில் குன்னூர் வந்தடைந்தது.
குன்னூரில், பாரம்பரியமிக்க மலை ரயிலின் பணிமனையைப் பார்வையிட்டு நூற்றாண்டு பழமையான நீராவி இயந்திரத்தின் இயக்கத்தைப் பற்றி அவர்கள் கேட்டறிந்தனர். இந்தப் பயணம் குறித்துப் பேசிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டஹர், ``கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தோம். முதலில் டார்ஜிலிங், சிம்லா சுற்றுலாவை முடித்துக் கொண்டு இந்த மலை ரயிலில் குன்னூருக்கு நீராவி இயந்திர ரயிலில் வந்தோம். இதில் பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது," என்றார்.

