புதுடெல்லி: இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டு 165 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புநோக்க 2021ல் 146 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தன்டனை விதிக்கப்பட்டோரில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர், பாலியல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. சென்ற ஆண்டின் இறுதியில், மரண தண்டனையை எதிர்நோக்கிச் சிறையில் உள்ளோரின் மொத்த எண்ணிக்கை 539 ஆனது. இது 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகம்.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 விழுக்காடு அதிகம்.
நீதிமன்றங்கள் அதிகமான வழக்குகளில் மரணதண்டனை விதிப்பதையும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளில் குறைவானவற்றுக்கே தீர்ப்பளித்திருப்பதையும் இது காட்டுவதாகக் கருதப்படுகிறது.
புதுடெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 'இந்தியாவில் மரணதண்டனை:
2022க்கான வருடாந்தரப் புள்ளிவிவரங்கள்' எனும் அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற ஆண்டு பிப்ரவரியில் அகமதாபாத் நீதிமன்றம் 38 பேருக்கு மரணதண்டனை விதித்தது. கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. சென்ற ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
சென்ற ஆண்டு பாலியல் குற்ற வழக்குகளில் 52 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. அங்கு 100 கைதிகள் மரணதண்டனையை எதிர்நோக்குகின்றனர். குஜராத்தில் இந்த எண்ணிக்கை 61. ஜார்க்கண்டில் 46 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள்.
மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் பெரும்பாலான முறையீட்டு வழக்குகளில் மனுதாரரை மரணதண்டனையிலிருந்து விடுவிப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும் அவை மிக மெதுவாகவே இவ்வழக்குகளில் தீர்ப்பளிக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் நீதிமன்றங்களில் புதிதாக சில வழக்குகளில் மரணதண்டனை விதிக்கப்படுகின்றது.
இதனால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருவதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

