ஆலந்தூர்: ஜி20 உச்சநிலை மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இன்று முதல் (ஜனவரி 31) பிப்ரவரி 2வரை சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகில் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இதையொட்டி ஜி 20 அமைப்பு சார்பில், நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
31ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யிலும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில், சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஓட்டலிலும் கூட்டம் நடக்க இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கி உள்ளனர். அதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்கும் விதத்தில், சென்னை விமான நிலையத்தில் மலர் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டு, வரவேற்புப் பதாகைகளும் விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதி வரை வைக்கப்பட்டுள்ளது.
அந்த வரவேற்பு பதாகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
"ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படம் மட்டுமே அந்த விளம்பர பதாகையில் இடம்பெற்றுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இல்லை. பெயரும் இடம் பெறவில்லை. இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வரவேற்பு பதாகைகள் அனைத்தும் ஜி20 மாநாட்டுக் குழுவால் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பதாகைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, புராதனச் சின்னம், சோதனைச் சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பிப்ரவரி 1ஆம் தேதி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்களுக்கு அருகில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

