ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவைத் தொடா்ந்து காலியான ஈரோடு தொகுதிக்கு இம்மாதம் 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
இந்த இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சார்பில் காங் கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அதிமுகவில் பழனி சாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரும் தனித்தனியா கப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும் இதுவரை வேட்பாளரை தேர்வு செய்யாமல் உள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
ஆங்காங்கே பிரசாரங்களும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.
இதனிடையே, ஈரோட்டில் எடப்பாடி அணியினர் ஆலோசனை நடத்தினர். தங்களுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவது குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.
பிப்ரவரி 4ஆம் தேதி அதிமுக வேட்பாளரை அறிவிக்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வி.கே. சசிகலா கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தனது கருத்தையும் கேட்கவேண்டும் என 'அதிமுக பொதுச்செயலாளர்' எனக் குறிப்பிட்டு அவர் கேவியட் மனுத்தாக்கல் செய்திருப்பது புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

