மேயர் பிரியா: 358 இடங்களில் புதிய நவீன கழிவறைகள்
சென்னை: "சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகளைக் கட்டுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகளும் சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் கிடைக்கப்பெறும் இடங்களில் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் சிதிலமடைந்த நிலையில் உள்ள நவீன கழிவறைகளைக் கட்டிக் கொடுத்த நிறுவனங்களை அழைத்து மீண்டும் அவற்றைச் சரிசெய்யும்படி கூறியதை அடுத்து, 37 இடங்களில் உள்ள கழிவறைகள் சீர்செய்யப்பட்டுள்ளன," என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
5ஆம் தேதி வரை காந்தியடிகள் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி
மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு நாளை அடுத்து, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 'காந்தியும் உலக அமைதியும்' என்ற தலைப்பில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது. வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியை பள்ளி மாணவர்கள் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் காந்தியடிகளின் அகிம்சை வழியிலான சுதந்திரப் போராட்ட வரலாறு, அவரது பாதையில் உலக அமைதியை வலியுறுத்தும் புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன. புத்தகங்களைக் கொண்டு காந்தியடிகளின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்
மிகவும் மாசடைந்த ஆறானது கூவம்
புதுடெல்லி: இந்தியாவின் அதிக மாசடைந்த ஆறுகளின் பட்டியலில் சென்னையின் கூவம் ஆறு இடம்பெற்று உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நதிகளின் மாசு குறித்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது. இந்தியாவின் 603 நதிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டதில், தமிழ்நாட்டின் அடையாறு, பவானி, காவேரி, பாலாறு, தாமிரபரணி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட ஒன்பது ஆற்றுப்படுகைகளும் மிகவும் மாசடைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேகதாது அணை விவகாரம்: அரசு சார்பில் கூடுதல் மனுத் தாக்கல்
புதுடெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெங்களூரு மாநகர குடிநீர்த் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்கக்கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுவில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

