மதுரை: மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியும் திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் இருவேறு சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
அரசியல் பகை காரணமாக இருவரும் கொல்லப்பட்டனரா என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
மதுரை மாவட்டம், சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் நகைக்கடை நடத்தி வந்தார். நாற்பது வயதான அவர் இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணைச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு தன் கடைக்கு அருகே நின்றிருந்த மணிகண்டன் மீது அடையாளம் தெரியாத இருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் அரிவாள் கொண்டும் வெட்டிய பின்னர் தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அரசியல் பகை காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் பகுதியிலும் அரசியல் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.
அப்பகுதியைச் சேர்ந்த 22 வயதான கவியரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியாகச் செயல்பட்டு வந்தார்.
பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த அவர், நேற்று முன்தினம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகிலுள்ள வயல்வெளியில் இறங்கி ஓடியுள்ளார் கவியரசன். எனினும் அக்கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று கழுத்தில் வெட்டியுள்ளது. இதில் கவியரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

