சென்னை: சிறப்புத் தணிக்கை நடவடிக்கையாக சென்னையில் வசிக்கும் குற்றப் பின்னணி கொண்ட 403 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்தத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அண்மைய சில மாதங்களாக சென்னையில் நடைபெறும் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் விதமாக காவல்துறை பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கண்காணிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 403 பேர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட
காவல்துறை அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, வழிப்பறி குற்ற வழக்குகள் தொடர்பாக சென்னையில் ஏற்கெனவே 316 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. 15 பேரிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணைப் பத்திரம் பெறப்பட்டது.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று இணையம் வழி ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாந்துவிடக்கூடாது எனத் தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களை எச்சரித்துள்ளார்.