இலவச புடவை, வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; தொழிலதிபர் கைது; பரஸ்பரம் புகார்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற தொழிலதிபர் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறார்.
அவற்றை வாங்க பல கிராமங்களில் இருந்தும் பெரும் கூட்டம் திரளும் என்பதால் முதலில் ஓரிடத்தில் அதற்கான சீட்டு விநியோகிக்கப்படும்.
தொழிலதிபரின் அலுவலக வளாகத்தில் சீட்டு வழங்குவதாக தகவல் பரவியதை அடுத்து பல கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாதர்கள் திரண்டதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பலரும் மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்குச் சென்ற வழியிலேயே 60 முதல் 75 வரை வயதுள்ள நான்கு மாதர்கள் மாண்டுவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சுமார் 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் தொழிலதிபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மாண்டவர்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் சுமார் ரூ.200,000 வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வேளையில், இலவச வேட்டி, சேலைக்கான சீட்டுகளை விநியோகிப்பதன் தொடர்பில் காவல்துறை அனுமதியை அந்தத் தொழிலதிபர் பெறவில்லை என்று ஒரு தரப்பு தெரிவிக்கிறது.
ஆனால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் மற்றொரு தரப்பு தெரிவிக்கிறது. விசாரணை தொடர்கிறது.

