செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு, ரயிலுக்குக் காத்திருந்தபோது தன்னை நால்வர் கும்பல் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 வயது இளம்பெண் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.
தனது காதலனைச் சிக்க வைக்கவே அந்த இளம்பெண் போட்ட நாடகம் இது என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
அந்த பெண், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர். அவர் சைதாப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
உத்திரமேரூரை அடுத்த மலையான்குளத்தைச் சேர்ந்த சலீம் என்கிற பிரகாஷ் என்பவருக்கும் அவருக்கும் காதல் அரும்பியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அதேபோல் நேற்றும் இருவரும் தனிமையில் சந்திக்க மாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த இளம்பெண் தனது காதலனான சலீமிடம் கேட்டுள்ளார்.
காதலன் மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சலீம் அந்த இளம்பெண்ணைத் தாக்கிவிட்டு சென்றுவிட்டார்.
காதலனைப் பழிவாங்கவே காவல்துறையில் அந்தப் பெண் போலியாக புகார் கொடுத்தார் என்பது தெரியவந்தது.
விசாரணை தொடர்கிறது.

