மழைநீரில் 1.33 லட்சம் ஏக்கர் பயிர்
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மிதக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் 1.33 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளதாக வேளாண்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மாடுவிடும் விழா: 25 பேர் காயம்
திருப்பத்தூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பெருமாபட்டு கிராமத்தில் 64ஆம் ஆண்டு மாடுவிடும் விழா, அதிகாரிகளின் அனுமதியுடன், பல கட்டுப்பாடு களுடன் சனிக்கிழமை நடந்தது. அதில் மாடுகள் முட்டி 25 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.
ஈரோடு: இதுவரை 122 புகார்கள்
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அரசியல் கட்சியினர் வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் நான்கு நிலை கண்காணிப்புக் குழுக்கள், மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 122 புகார்கள் பெறப்பட்டு அதில் 115 புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
200வது நாளை நெருங்குகிறது
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம், ஏறக்குறைய 190 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது. 200வது நாள் போராட்டத்தைப் பெரிய அளவில் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். கண்டனப் பொதுக் கூட்டத்தை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
'வீரமணியுடன் சாப்பிட ஆசை'
சென்னை: தமிழ்நாட்டில் 'தலைவா' என்ற பெயரில், அரசியல் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'தலைவா' திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
"தொண்டர்கள் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும். நான் எதிர்மறை சித்தாந்தம் கொண்ட தலைவர்களுடன் பழக ஆசைப்படுகிறேன்.
"திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த ஆசைப்படுகிறேன். எதிர்த்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும்போது நமது மனம் திறக்கும். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை ஏற்கெனவே நான் சந்தித்து இருக்கிறேன்," என்று அண்ணாமலை பேசினார்.
சென்னை விமான நிலையம் இரு காலனிகளை உள்ளடக்கி விரியும்
சென்னை: சென்னை விமான நிலையத்தை நீட்டிக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிடுகிறது. இதன் பகுதியாக, அந்த விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதையின் வடக்குப் பகுதியில் அதி நவீன முனையம் ஒன்று கட்டப்படும்.
ஜிஎஸ்டி ரோட்டுக்கு அருகே இருக்கும் ஏஏஐ காலனி, ஏர் இந்தியா காலனி இரண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு நிலையம் நீட்டிக்கப்படும். இந்த மேம்பாட்டுப் பணிகளின் விளைவாக சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலுடன் திகழும். புதிய முனையம் 2024ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

