திண்டுக்கல்: இந்திய ராணுவத்தில் 32 ஆண்டுகாலமாகச் சேவை யாற்றி, ஓய்வு பெற்றுள்ள இருதய சாமி என்ற 81 வயது முதியவர், தன் மறைவுக்குப் பிறகு தனது வீடு, சேமிப்புப் பணம் உள்ளிட்ட அனைத்துச் சொத்துகளையும் இந்திய ராணுவத்துக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"இளைஞர்கள் தங்களது பொன்னான நேரத்தைச் சோம்பிக் கிடந்து பாழ்படுத்திவிடாமல், விளையாட்டில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். ராணுவத்தில் சேர்ந்து நம் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கவேண்டும்," என அவர் வலியுறுத்தி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுபேதார் மேஜர் எஸ்.இருதயசாமி, தன் 18 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
தேசிய அளவிலான தடகளப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள இவர், ராணுவ அதிகாரி ஏ.அருணுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், தானும் தன் மனைவியும் மறைந்த பின்னர், வீடு, சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு நன்கொடையாக அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள ரூ.10 லட்சம் பணத்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்விக்கும் முதியோர் நலனுக்கும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இருதயசாமி கூறுகையில், "எங்களுக்குக் குழந்தைகள் கிடையாது. எனவே, எனது சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். மேலும், இம் முடிவை நானும் என் மனைவியும் சேர்ந்துதான் எடுத்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.
எங்களுக்குக் குழந்தைகள் கிடையாது. இந்திய ராணுவம் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளது. அதற்கான நன்றிக் கடனாகவே எனது வீடு, சேமிப்புப் பணம், சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். இம்முடிவை நானும், என் மனைவியும் சேர்ந்துதான் எடுத்தோம்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் இருதயசாமி

