சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி நேற்று பதவியேற்றுக்கொண்ட சூழலில், அவரது நியமனத்துக்கு எதிரா கத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கமுடியாது எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நேற்று காலை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, விக்டோரியா கெளரி ஆகிய ஐந்து பேரும் புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இவர்களுடன் சேர்த்து இங்கு பணிபுரியும் நீதிபதிகளின் எண் ணிக்கை 57 ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கெளரியை புதிய நீதிபதியாக நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சிலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
"தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விவகாரங்கள் குறித்தும் இந்தியாவில் குறிப்பிட்ட சில அமைப்புகள் கலாசார அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பேசிய காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் உள்ளது," என்று தங்களது மனுவில் மூத்த வழக்கறிஞா்கள் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சி சார்பில் செயல்பட்டு இருப்பதாக நீதிபதி கவாய் தெரிவித்தார்.
அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாகப் பதவியேற்றுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. நீதிபதிகளை அவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையில் பின்தொடர முடியாது. அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பின்னரே நீதிபதியாக கொலிஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

