செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
271419d6-0fbc-4626-9adc-cc61282ac468
-

பயிர் சேதங்களைக் கணக்கிட தமிழகம் வரும் மத்திய குழுவினர்

சென்னை: தமிழ்நாட்டில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் இந்தக் குழு விரைவில் தமிழகம் வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்ததைத் தொடர்ந்து, விரைவில் தமிழகம் வரவுள்ள குழு, பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இதனிைடயே, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான போட்டியில் இருந்து அமமுக விலகுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். "குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. புதிய சின்னத்தில் போட்டியிட்டால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதால் அமமுக விலகுகிறது," என அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட பெண்ணைக் காப்பகத்தில் வைக்க உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வினீத்-­கிருத்திகா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி. ஆனால், இந்த திருமணத்தில் கிருத்திகாவின் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. இந்நிலையில், பெண் கடத்தப்பட்ட வழக்கில், கிருத்திகாவை இரண்டு நாள்கள் காப்பகத்தில் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் வழக்கு குறித்து காவல்துறை முழு விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது பெற்றோர், உறவினர்கள் சந்திக்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேங்காக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்ட குரங்குக்குட்டிகள்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்குக் குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை மீனம்பக்கம் விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து வந்திறங்கிய விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதித்தபோது, அவர் வைத்திருந்த கைப்பை லேசாக அசைவதுபோல் தெரிந்தது. இதையடுத்து, பையைத் திறந்து பாா்த்தபோது அரிய வகை குரங்குக்குட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் பயணியிடம் இல்லாததால் இரண்டு குரங்குக் குட்டிகளையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாகக் கூறினர்.