நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கோடிக்கணக்கான முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 5 கோடிக்கும் அதிகமான முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு தினமும் நான்கு கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 9ஆம் தேதி முட்டைகளின் பண்ணை விற்பனை விலை 565 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் முட்டை விற்பனை வரலாற்றில் அது மிக அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 12 நாட்களாக இதே நிலை நீடித்ததால் முட்டை விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
இதனால் நாமக்கல் கோழிப்பண்ணை கிடங்குகளில் கோடிக் கணக்கான முட்டைகள் தேங்கத் தொடங்கின.
இதன் காரணமாக முட்டை விற்பனையை அதிகரிப்பதற்காக பண்ணையாளர்கள் முட்டை விலையைக் குறைக்கத் தொடங்கினர்.
முட்டையின் பண்ணை விற்பனை விலை 565 காசுகளிலிருந்து படிப்படியாகச் சரிந்து 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் தற்போது வரை 460 காசுகளாக முட்டை விலை நீடிக்கிறது. முட்டை விலை குறைந்து விற்பனை அதிகரித்தாலும் முட்டைகள் கோடிக்கணக்கில் இன்னமும் தேங்கிக் கிடக்கின்றன.
இதற்கிடையே முட்டை விலை குறைந்ததால் தினமும் 5 கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் ஏற்படு வதாகக் கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

