சென்னை: புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று காலை சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் இடை நிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயன் அடைந்து வருகின்றனர்.
குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக 'புதுமைப் பெண்' திட்டம் உதவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மேலும் ஒரு லட்சத்து 4,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் 'புதுமைப்பெண்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார்.