சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடைக்குச் சொந்தமான கிடங்கிலிருந்து ரூ.28 லட்சம் (S$44,866) மதிப்புள்ள பட்டுப்புடவைகள் கொள்ளை அடிக்கப் பட்டன.
பட்டுப் புடவைகளை ஆட்டோவில் கொள்ளையடித்துச் சென்ற கிடங்குக் காவலாளியைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் 'ரேகா கலெக்ஷன்' என்ற பெயரில் பிரபல துணிக்கடை உள்ளது. அந்தக் கடைக்குச் சொந்தமான கிடங்கு தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை திலக் தெருவில் உள்ளது.
அந்தக் கிடங்கில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டுப்புடவைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல கடை ஊழியர்கள் வந்து கிடங்கைத் திறந்துபார்த்தபோது 26 பட்டுப்புடவை பண்டல்களைக் காணவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட பட்டுப்புடவைகளின் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும்.
இது தொடர்பாகத் துணிக்கடை சார்பில் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவலர்கள், அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது கிடங்கில் காவலராக வேலைப் பார்த்த ராம் என்பவர், பட்டுப்புடவைகளைக் கொள்ளையடித்து ஆட்டோ ஒன்றில் மற்றொருவரின் உதவியுடன் ஏற்றிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. காவலாளி ராம், ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்தவர். அவரையும் அவருடன் இருந்த நபரையும் காவலர்கள் தேடி வருகின்றனர்.

