மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குன்று முழுவதும் வரலாற்று சிறப்புடையதாகத் திகழ்கிறது. இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் பல குடைவரைக் கோயில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் எதிரிலுள்ள குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன.
அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுக்கைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மேலே உள்ள குகைக்குச் செல்லும் வழியில் அதன் இடதுபுறம் ஒரு சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே 5 கற்படுக்கைகள் உள்ளன.
வட்டவடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு இருப்பதை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்துவரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டறிந்தார்.
தொடர்ந்து அதிகாரிகள் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்தனர்.
தமிழக அரசின் ஓய்வுபெற்ற தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கம் துணையுடன் படியெடுத்த கல்வெட்டை படித்ததில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு அது என அறியப்பட்டது.

