ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் சூழலில், வெற்றி தோல்வி குறித்த ஆருடங்களை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
இம்மாதம் 16 முதல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 27ஆம் தேதிவரை கருத்துக் கணிப்பு களை வெளியிடக்கூடாது என தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளாா்.
வாக்குப்பதிவு காலகட்டத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் விவரங்களை வெளியிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் அதிமுக சார்பில் தென்னரசும் போட்டியிடுகின்றனர்.
இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் நாசர், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோரும் திமுக நிர்வாகிகளும் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.
இதனிடையே வேப்பம்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் செல்வாக்கை கண்டு திமுக அஞ்சுவதாகக் கூறியவர், அதிமுக அமோக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் அமைச்சர்களைக் களமிறக்கி வாக்காளர்களுக்குப் பணத்தை திமுக வாரி இறைப்பதாகக் குற்றம்சாட்டிய பழனிசாமி, தேர்தல் ஆணையமும் காவல்துறையும் பணப்புழக்கத்தைத் தடுக்காமல் கண்டும்காணாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சாடினார்.
எழுதாத பேனாவிற்கு ரூ.80 கோடி செலவு செய்வதா எனக் கேட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ரூ.2 கோடியில் மறைந்த கருணாநிதி நினைவு மண்டபத்தில் பேனாவை வைத்துவிட்டு, மீதமுள்ள 78 கோடியை மக்களுக்குச் செலவிடலாமே என்றும் யோசனை கூறியுள்ளார்.
"பொங்கல் தொகுப்பில் ரூ. 500 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. அதனைத்தான் இப்போது தேர்தலுக்குச் செலவிடுகின்றனர். அது உங்களது பணம். அதனை வாங்கிக்கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்," என்றும் பேசியுள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "சென்னை-கோவைக்கு இணையாக ஈரோடு மாநகராட்சியின் தரமும் உயர்த்தப்படும். சாலைகளும் குடிநீர் விநியோகமும் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாகச் சீரமைக்கப்படும்," என்றார்.
இதனிடையே, இளங்கோவ னுக்கு கை சின்னம், தென்ன ரசுக்கு இரட்டை இலைச் சின்னம், தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய் துள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

