அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி வழங்க ஏற்பாடு
நாகர்கோவில்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என்றும் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பாஜக உரிய மரியாதை வழங்கவில்லை என ஓபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டு
சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவித்த அவர்கள், பன் னீர்செல்வத்தின் பதவியைக் குறிப்பிடாமல் அவமதித்து விட்டதாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 67 லட்சம் பேர்
சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு இதுவரை அரசு வேலை கிடைக்காமல் 67 லட்சம் பேர் காத்துக் கிடப்பதாக மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் தமிழகத்தில் உள்ள மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 67 லட்சத்து 58,698 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 31 லட்சத்து 49,398 ேபர் ஆண்கள், 36 லட்சத்து 9,027 பேர் பெண்கள் என்று மாநில வேலைவாய்ப்பு இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.
கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவோம்: ஆணையர் அன்பு
சென்னை: தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்தவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பலூர் நகைக்கடையில் இருந்து ஒன்பது கிலோ தங்க நகைகளையும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வைர நகைகளையும் சந்தேகப் பேர்வழிகள் கொள்ளையடித்துச் சென்ற நிலையில், நேற்று காலை கடையைத் திறக்கவந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதர், கொள்ளை போனதை அறிந்து அதிர்ந்தார்.
"கொள்ளையர்களைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்டிப்பாகத் துப்பு கிடைக்கும்," என காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

