தேமுதிக மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற தேமுதிக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது, "நமது வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். தேமுதிக மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்," என்று பேசினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்தை ஆதரித்து இம்மாதம் 19 முதல் 24ஆம் தேதிவரை வீதி வீதியாகச் சென்று முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும்படி சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சொத்துகள் விவரம் வெளியீடு
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
கைச் சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் சொத்தையும் சேர்த்து ஏறக்குறைய ரூ.10 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாகவும் இளங்கோவனின் குடும்பக் கடன் ஏறக்குறைய மூன்றரை கோடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசின் சொத்து மதிப்பு ரூ.4 கோடி என்றும் கடன் ஏதுமில்லை என்றும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தின் (முரசு சின்னம்) சொத்து மதிப்பு ரூ.15 லட்சம், வங்கிக் கடன் ரூ.2 லட்சம் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவின் (கரும்பு விவசாயி சின்னம்) சொத்து மதிப்பு ரூ.11 லட்சம், கடன் மதிப்பு ரூ.7 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் திறப்பு
தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களைக் காணொளிக் காட்சி வழி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் ரூ.105 கோடி மதிப்பில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

