விக்கிரவாண்டி: விழுப்புரத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்தவர்களில் 17 பேரைக் காணவில்லை என வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே உள்ள குண்டல புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் 'அன்பு ஜோதி' என்ற தனியார் ஆசிரமத்தில் நூற்றுக்கும் மேலான முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த ஆதரவற்றோர் இல் லத்தை கேரளாவைச் சேர்ந்த ஜீபின் பேபி, 45, என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். இங்கு 140 ஆதரவற்றோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆதரவற்றோர் இல்லத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 17 பேர் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதனிடையே, திருப்பூரைச் சேர்ந்த சலீம் கான் என்பவர் தனது மாமனார் ஜாபருல்லா, 45, என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரை இந்த ஆசிரமத்தில் கடந்த 2021ல் சேர்த்துள்ளார்.
தனது பணியின் காரணமாக அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திரும்பினார்.
அப்போது, தனது மாமனார் ஜாபருல்லாவைப் பார்ப்பதற்காக 'அன்பு ஜோதி' இல்லத்திற்கு வந்து விசாரித்தார்.
"இங்கு போதுமான இடம் இல்லாததால் ஜாபருல்லாவை பெங்களூருவில் உள்ள ஆதர வற்றோர் இல்லத்திற்கு இட மாற்றம் செய்துவிட்டோம். நீங்கள் அங்கு சென்று பாருங்கள்," என இல்லத்தின் உரிமையாளர் ஜீபின் பேபி தெரிவித்தார்.
இந்நிலையில், ஜாபருல்லாவை பெங்களூருவிலும் காணாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் சலீம் கான் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஆசிரமத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்ததும் 17 முதியவர்கள் காணாமல் போயிருப்பதும் தெரிந்தது.
அத்துடன், ஆசிரமத்தில் இறந்த முதியவர்கள் குறித்த ஆவணங்களையும் நிர்வாகத்தினர் முறையாகப் பராமரிக்கவில்லை என்பதும் உறுதியானது.
ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் தங்கியுள்ள வர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

