சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புளோரா எனும் இலங்கைத் தமிழர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.ஜி. மருத்துவ மனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நிரந்தரமாக முடங்கியதாக அவர் கூறியிருந்தார்.
"கருத்தரிப்பு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவமனை என்று கேள்வியுற்றதால் அங்கு சிகிச்சைக்குச் சென்றேன். என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பையில் கட்டி உள்ளதாகக் கூறி அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றனர். அதன்படி எனக்கு 2013ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் எனக்கு மூச்சுத்திணறல், வாந்தி, தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டன.
"அங்கிருந்த தாதியர் மூலம் மருத்துவர்களிடம் தெரிவித்தேன். இவையெல்லாம் சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் வழக்கமாக நிகழ்வுகள் என்று மருத்துவர்கள் கூறினர்.
"என்னால் வலியைத் தாங்கமுடியாமல் துடித்தபோது, என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த ஒரு ஒப்புதலையும் பெறாமல் 2வது அறுவை சிகிச்சை செய்தனர்.
"பின்னர், என்னை அப்போலோ மருத்துவமனைக்கு இடம்மாற்றினர். அங்கு என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையில் தவறு நடந்துள்ளதாகவும் பெருங்குடலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.
"அதன் பின்னர் 3வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது என் சகோதரரிடம் ஜி.ஜி. மருத்துவமனை நிர்வாகத்தினர் ரூ.5 லட்சம் தருவதாகவும் இந்தப் பிரச்சினையை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் சமரசம் பேசினர். இதை நாங்கள் ஏற்கவில்லை.
"தவறான அறுவை சிகிச்சையால் சுமார் 37 நாள்கள் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து உயிரைக் காப்பாற்ற போராடியுள்ளேன். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே எனக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் ( S$ 241,812 ) இழப்பீடு வழங்க ஜி.ஜி. மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்." என்று தனது மனுவில் அவர் கோரி இருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், "தவறான அறுவை சிகிச்சையால் மனுதாரரின் பெருங்குடல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மலத்தை வெளியேற்ற வயிற்றுக்கு மேல் பை ஒன்று நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. அதன் வழியாகத்தான் மலம் கழிக்க வேண்டும்.
"இதனால் அவரால் பிறருடன் பழக முடியவில்லை. பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் இழந்துள்ளார். பிறர் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார் என்று சொன்னார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தவறான சிகிச்சையால் மனுதாரர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கினார்.
"வழக்கமான, அன்றாட வாழ்க்கையை வாழமுடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். எனவே அவருக்கு இழப்பீடாக ரூ.40 லட்சத்தை ( S$ 64,483 ) 12% வட்டியுடன் ஜி.ஜி. மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும்," என்று நீதிபதி உத்தரவிட்டார்.

