திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒரே இரவில் நான்கு வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் ரூ. 75 லட்சத்துக்கும் அதிகமாக கொள்ளை யடித்துள்ளனர்.
ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த கொள்ளைச் சம்பவங்களால் திருவண்ணாமலை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து சனிக்கிழமை இரவு மர்ம கும்பல் ஒன்று சுமார் ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்தது.
இது, அன்று நடைபெற்ற முதல் கொள்ளைச் சம்பவமாகும். இதற்கு அடுத்தடுத்து இதே பாணியில் ஏடிஎம் கொள்ளைகள் நடந்துள்ளன. கொள்ளையடித்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதேபோல போளூர் ரயில் நிலையம் அருகே இருந்த ஏடிஎம் இயந்திரத்திலும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதிலும் ஏடிஎம் இயந்திரம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்துள்ளன.
இது குறித்து காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்ட வேளையில் மேலும் இரண்டு ஏடிஎம்களும் தீப்பிடித்து எரிவதாகத் தகவல் வந்தது.
இதையடுத்து காவல்துறை விசாரித்ததில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம், கலசப்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் ஆகிய இரண்டும் கொள்ளை யடிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது.
"கொள்ளையர்கள் 'கேஸ் கட்டர்' கொண்டு வெல்டிங் செய்து ஏடிஎம்களை உடைத்து அதன் பின்னர் கொள்ளையடித்துள்ளனர். இந்த நான்கு ஏடிஎம்களிலும் சேர்த்து சுமார் ரூ.75 லட்சத்திற்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கொள்ளைக்குப்பின் தீ வைக்கப்பட்டதில் கண்காணிப்புக் கேமரா, பதிவு சாதனங்கள் முற்றிலும் சேதம்அடைந்துள்ளன.
"எனவே கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது," என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.