சென்னை: சென்னை புளியந்தோப்பில் காமராஜர் சிலையை அகற்ற வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்பிச் சென்றனர்.
புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை அம்பேத்கர் நகர் சந்திப்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மார்பளவு காமராஜர் சிலை சேதமடைந்து இருந்ததால் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைச் செயலாளர் சி.கே.தேவன், அந்தச் சிலையை அகற்றிவிட்டு சிறிய பீடம் அமைத்து அதில் ஏழு அடி உயரத்தில் காமராஜர் சிலையை அமைத்துள்ளார்.
இதையடுத்து சனிக்கிழமை மதியம் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் அழகேசன் தலைமையிலான காவல்துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காமராஜர் சிலையை அகற்ற வந்தனர்.
இதையறிந்த வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டில்லிபாபு, திரவியம், பகுதி தலைவர்கள் என்.எஸ்.பாஸ்கர், பாபுகான் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர்.
காமராஜர் சிலையை அகற்றக்கூடாது என அவர்கள் முழக்கமிட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சியிடம் முறைப்படி அனுமதி பெற்று சிலை திறக்கப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் எழுதிக் கொடுக்கப்பட்டதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.