செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

தியாகிகள் சிலைகள் திறப்பு

சென்னை: சென்னையில் ரூ.34 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர் சகோதரர்களின் சிலைகளையும் ரூ.18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்துவைக்கிறார். இதேேபால் ரூ.43 லட்சம் மதிப்பிலான வ.உ.சிதம்பரனாரின் சிலையும் கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது.

சாதி தான் என் முதல் எதிரி: மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: சென்னையில் நடந்த புத்தக மையத் திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியபோது, "நாம் உருவாக்கியதுதான் அரசியல். இது மக்களுக்கானது. அரசாட்சி புரிபவர்கள், ஆளும்கட்சியினர் என்ற வாா்த்தைகள் எல்லாம் இனி இருக்கக் கூடாது என நினைக்கிறேன். ஏனெனில், நம்மால் நியமிக்கப்பட்டவர்கள்தான் கட்சித் தலைவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் நிழலாடும்போதுதான் ஜனநாயகம் நீடூழி வாழும். என் முக்கிய அரசியல் எதிரி என்றால் அது சாதிதான். அரசியலில் இருந்து அதனை முற்றிலும் நீக்கவேண்டும். இதை எனது 21 வயது முதல் நான் கூறி வருகிறேன்," என கமல்ஹாசன் கூறினாா்.

விபத்தில் நால்வர் உயிரிழப்பு

ராமநத்தம்: கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நேற்று காலை நால்வர் உயிரிழந்தனர். சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பியபோது கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த மதிவாணன், 35, அவரது மனைவி கௌசல்யா, 32, மகள் சாரா, 2, மாமியார் தவமணி, 55, ஆகியோர் இறந்தனர். துரைராஜ் என்பவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராமநத்தம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவாடு விற்பனையகம் திறப்பு

மதுரை: இந்தியாவில் முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் 'ஒரு நிலையம், ஒரு பொருள்' என்ற திட்டத்தின் கீழ் இந்த கருவாடு விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது.