சிவகங்கை: சிவகங்கை அருகே அமைக்கப்பட்டுள்ள புத்தர் கோயிலை தாய்லாந்தில் இருந்து வந்த புத்தபிக்குகள் சடங்குகள் செய்து திறந்து வைத்தனர். இவ் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
'அன்பே கடவுள்' என போதித்த கௌதம புத்தருக்கு பாகனேரி அண்ணாமலைச் செட்டியார் குடும்பத்தினர் தங்கள் சொந்த இடத்தில் கோயில் எழுப்பி உள்ளனர்.
இதையடுத்து, கோயிலில் சடங்குகளைச் செய்வதற்காக தாய்லாந்து நாட்டிலிருந்து புத்தபிக்குகள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குச் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் இருந்து ஜப்பானிய பாணியில் தயாரான புத்தர் சிலை தருவிக்கப்பட்டு, அதற்கு தாய்லாந்து புத்தபிக்குகள் சடங்குகளைச் செய்தனர்.
பாகனேரியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தர் கோயிலுக்கு கடந்த மூன்றாம் தேதி தமிழ் முறைப்படி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் எழுப்பப்பட்டுள்ள இந்தப் புத்தர் கோயில் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

