விழுப்புரம்: உலகெங்கும் நாளை (பிப்ரவரி 14) அன்பர் தினமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் இரு இளையர்கள் தங்களது அன்பர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக ஆட்டைத் திருடி காவலர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர்களான கல்லூரி மாணவர் அரவிந்த்குமார், 20, மோகன், 20. நண்பர்களான இருவரும் அன்பர் தினத்தைக் கொண்டாட மிகவும் ஆர்வமாக இருந்தனர். அவர்களிடம் போதிய பணம் இல்லாததால், ஆடுகளைத் திருடி, விற்று அன்பர் தினத்தைக் கொண்டாட முடிவு செய்தனர்.
இதற்காக விழுப்புரம் அருகே உள்ள மலையரசன்குப்பம் பகுதிக்குச் சென்ற நண்பர்கள் இரு வரும், ரேணுகா என்பவர் தனது பட்டியில் அடைத்து வைத்திருந்த 10 ஆடுகளில் ஒரே ஒரு ஆட்டை மட்டும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது ஆடு கத்தவே, இந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த ரேணுகா ஊரைக் கூட்டிவிட்டார். இளையர்களை மடக்கிப் பிடித்து கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

