தஞ்சாவூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் என்றும் அவர் விரைவில் மக்கள்முன் தோன்றுவார் என்றும் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்.
பிரபாகரன் குடும்பத்தின ருடன் எனக்குத் தொடர்பிருக் கிறது. அவரது அனுமதியுடன் தான் இதனை தாம் அறிவிப்பதாகவும் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், அவர்கள் இப்போது எங்கே உள்ளனர் என்ற தகவலை இப்போது வெளியிட இயலாது என்று திரு நெடுமாறன் கூறினார்.
அனைத்துலகச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கும் சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசியத் தலைவரை வெளிக்கொண்டு வருவதற்கு உகந்த சூழலை உருவாக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை ராணுவம், அவர் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டதாக பிபிசியிடம் கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் பேசியபோது, "விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிக்கட்டப் போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன," என்றார்.
அத்துடன், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் 'டிஎன்ஏ' என்ற மரபணு பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் இருந்தன.
இப்போது, தவறான தகவல்களை வெளியிடுகின்றனர். இக் கூற்று எங்களுக்கு எவ்வித எச்சரிக்கை மனப்பாங்கையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை," என்று தெரிவித்துள்ளார்.
"பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை," எனக் கூறியுள்ள இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத். படம்: இலங்கை ராணுவம் வலைத்தளம்

