ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்யும் திட்டமில்லை என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் தென் னரசை ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருந்த நிலையில், தென்னரசு வாக்குச் சேகரிக்கும் தருவா யில் பாஜக நிர்வாகிகள் ஒதுங்கிக்கொள்வதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான பாஜகவை அதிமுக தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையுடன் சேர்ந்து பிரசாரம் செய்யமாட்டேன் என்று பழனிசாமி தெரிவித்திருப்பதும் பாஜகவினர் மத்தியில் விவா தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என ஈரோட்டில் முகாமிட்டுள்ளதால் தேர்தல் களம் சுறு சுறுப்புடன் காணப்படுகிறது.
இந்த இடைத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழலில், அதிமுக வேட்பாளர் தென்னரைசை ஆதரித்து பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய ஐந்து நாள்கள் பழனிசாமியும் பிப்ரவரி 19, 20 ஆகிய இரண்டு நாள்கள் அண்ணாமலையும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரசாரம் செய்தபோது, "சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைப்பவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி தரவேண்டும்," என மக் களை அவர் கேட்டுக்கொண்டார்.
"திமுகவினர் ஆளுங்கட்சியாக இருப்பதால் செலவிலும் தாராளம் காட்டுகின்றனர். இதற்கு அதிமுகவினரால் ஈடுகொடுக்க முடியாத நிலை உள்ளது. எனினும், தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் இரு கட்சியினரிடமும் கடும் போட்டி நிலவிவருகிறது," என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

