விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனிடம் விசாரணை நடத்த மத்திய, மாநில உளவு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவரது குடும்பத்தாருடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் நெடுமாறன் கூறியுள்ளார்.
இது இந்தியாவிலும் இலங்கையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுமாறன் சொல்வது உண்மையா அல்லது தவறான தகவலா என்பது குறித்து பொது வெளியில் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், பிரபாகரன் மரணம் குறித்த விசாரணையை உளவு அமைப்புகள் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
நெடுமாறனும் அவரது ஆதரவாளர்களும் தற்போது உளவு அமைப்புகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
நெடுமாறன் தரப்பிடம் மிக விரைவில் விசாரணை நடத்த உளவுப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அப்பிரிவின் ஐ.ஜி. செந்தில்வேலன், கியூ பிரிவு கண்காணிப்பாளர் கண்ணம்மாள் ஆகிய மூன்று அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மூன்று பேரின் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
பிரபாகரன் மரணம் தொடர்பாக கடந்த 14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்களை மட்டுமே சொல்லி வருவதாக இலங்கை முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார் நெடுமாறன். அவருக்கு இலங்கையில் பலருடன் தொடர்புள்ளதால் அவரது கூற்றை லேசாக கருதிவிட இயலாது என உளவு அமைப்புகள் கருதுவதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, பிரபாகரன் மரணம் தொடர்பாக மீண்டும் குழப்பமான தகவல்களை வெளியிட வேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

