சென்னை: தொழிலதிபர் அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டின் பிரதமர் அதானி குறித்து பேச மறுப்பதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
அதானி குழும முறைகேடுகளைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள், எல்ஐசி நிறுவன அலுவலகங்கள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அழகிரி.
"அதானி குழுமங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவேதான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
"ஆனால் பாஜகவினர் இத்தகைய விசாரணைக்கு தயாராக இல்லை. பிரதமர் நரேந்திர மோடியோ, இதுவரை அதானி குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை," என்றார் கே.எஸ்.அழகிரி.
தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குற்றங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் அவற்றை யாரும் மூடி மறைக்கவில்லை என்றார்.
அதேசமயம், உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் பிற மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு நிலை எவ்வாறு உள்ளது என்பதை நன்கு ஒப்பிட்டுப் பார்த்து, அதன் பிறகு தமிழக அரசை விமர்சிப்பதுதான் சரியாக இருக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி மேலும் தெரிவித்தார்.

