சென்னை: வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னையில் நேற்று இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தங்கு விடுதியின் உரிமையாளரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம், மணலி, திருப்பெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வரி ஏய்ப்பு தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், சென்னையிலும் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
அண்மை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
இதற்கிடையே, சென்னை தியாகராய நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பல லட்சம் ரூபாய் ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் அது வெறும் வதந்தி என பின்னர் தெரியவந்தது.

