கோவை: 'கார் கொடுத்தால் பணம்' என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு நூதன மோசடியில் ஈடுபட்டவர் கோவை காவல்துறையினரிடம் சிக்கினார்.
அவரிடம் இருந்து 19 கார்களும் ரூ.8 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் பயண நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
பின்னர், கார் வைத்திருப்பவர் தங்களை அணுகி காரை கொடுத்தால் அதற்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கப்படும் என்றும் புதிய கார்களுக்கு மாதத் தவணை செலுத்த வேண்டியிருந்தால் அதற்கு தனது நிறுவனமே பொறுப்பேற்கும் என்றும் அறிவித்தார் வெங்கடேஷ்.
அவரை நம்பி பலர் தங்கள் கார்களை ஒப்படைத்தனர். இவ்வாறு முப்பது கார்களை வைத்து தனது நிறுவனத்தை நடத்தி வந்த வெங்கடேஷ், ஓரிரு மாதங்கள் தாம் அறிவித்தபடி கார் உரிமையாளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், திடீரென தலைமறைவானார் வெங்கடேஷ். உரிமையாளர்களிடம் கார், பணம் என எதையும் கொடுக்காமல் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் மாயமாகினர்.
மோசடிப் புகார்களின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் கார்களை போலி ஆவணங்கள் தயார் செய்து வெங்கடேஷ் பிறரிடம் விற்றது தெரியவந்துள்ளது. அவரது தலைமையில் இயங்கிய மோசடிக் கும்பலிடம் இருந்து இதுவரை 19 கார்கள் மீட்கப்பட்டுள்ளன.

