40 ஆயிரம் போலி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இப்புகாரை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, பட்டியல் தயாரித்து, தேர்தல் ஆணையத்திடம் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முறையாக நடைபெற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொகுதியை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
300 புத்தகங்கள் வழங்கிய முதியவர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: சிறைக் கைதிகள் படிக்கும் வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வரும் நிறையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 92 வயதான பாலகிருஷ்ணன் என்ற முதியவர் தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளார். தமது வாழ்நாளில் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக் கைதிகள் பயன்பெற வேண்டும் என்று அம்முதியவர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு புத்தகங்களை வழங்கும் திட்டத்தினால் தாம் பெருமிதம் கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கூவம் கரையோரப் பகுதிகளில்
43 வகையான மரங்கள் நடப்படும்
சென்னை: கூவம் கரையோரப் பகுதிகளில் 43 வகையான மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 'சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை' நிதியின் கீழ் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளின் கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமன்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல், தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படு வதாக மாநகராட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 4.22 கிலோ மீட்டர் நீளத்துக்கு 29,300 மரக்கன்று கள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதற்காக ரூ.3.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து
ரூ.1.5 கோடி பறித்த மூவர் கைது
சென்னை: காவல்துறையினர் போல் நடித்து 1.5 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த நகைக் கடை ஊழியர்கள் இருவர் கடந்த 3ஆம் தேதி நகைகள் வாங்க பேருந்தில் சென்னை வந்திருந்தனர். பின்னர் தங்கு விடுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டி ருந்த அவர்களை சௌகார் பேட்டை பகுதியில் காவல்துறை யினர் சீருடையில் இருந்த சிலர் தடுத்து நிறுத்தினர். வாகனச் சோதனை நடப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், ஊழியர்கள் வைத்துள்ள பணத்துக்கு உரிய ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டுள்ளனர். ஊழியர்கள் தடுமாறவே, அவர் களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்வதாக கூறி, ரூ.1.5 கோடி பணத்துடன் மாயமாகினர். இந்த வழக்கில் இம்ரான் என்பவர் முதலில் கைதானார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் இருவர் நேற்று முன்தினம் பிடிபட்டனர்.
டிஜிபி: எச்சரிக்கை கருவி அவசியம்
சென்னை: கொள்ளைச் சம்பவங்களைத் தவிர்க்க ஏதுவாக ஏடிஎம் மையங்களையும் அருகில் உள்ள காவல் நிலையங்க ளையும் இணைத்து எச்சரிக்கை மணியடிக்கும் (அலாரம்) கருவிகளைப் பொருத்த வேண்டும் என காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளார். மேலும், அம்மையங்களில் ரகசிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

