விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 'அன்பு ஜோதி' ஆதரவற்றோர் இல்லத்தை மூடி அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருவதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்தக் குரங்களை விட்டு கடிக்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குரங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் உள்ள 'அன்பு ஜோதி' இல்லத்தில் மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஒருவர் காணாமல் போனதால், அவரது உறவினர் தொடர்ந்த வழக்கை அடுத்து, ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சோதனையில் இல்லத்தில் இருந்தவர்களில் 17 பேர் காணா மல் போனதாக கடந்த வாரம் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இதையடுத்து ஆறு பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப் பதிந்து நான்கு பேரை கைது செய்துள்ள காவலர்கள், சிகிச்சையில் உள்ள இல்லத்தின் நிர்வாகி ஜுபின் பேபி, 45, அவரது மனைவி மரியா ஜுபின், 43, ஆகியோரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பழனி, "ஆசிரமத்தை உரிய அனுமதியின்றி நடத்தியதும் அங்கு தங்கியிருந்தவர்களை சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதும் தெரியவந்துள்ளது.
"இதையடுத்து சம்பந்தப்பட்ட இல்லத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.
ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 142 பேர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இரு நாள்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களில் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்த ஆட்சியர் பழனி, சிகிச்சைக்குப் பிறகு ஆதரவற்றோரை அருகில் உள்ள மற்ற காப்பகங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார்.

