கரூர்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கரூர் மாவட்டத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தனர்.
அப்போது அவர்கள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமாகினர்.
அப்பகுதி இளைஞர்களும் தீயணைப்புத்துறையினரும் மாணவிகளைத் தேடியதைத் தொடர்ந்து, மூழ்கிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் நான்கு மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
அவர்களது சடலங்களை பரிசலில் போட்டு மீட்புக் குழுவினர் கரைக்குக் கொண்டு வந்தனர். அவர்களது சடலங்கள் உடல்கூறு பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசியபோது, குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பலகை இருந்தும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்ததால் வெளிமாவட்டத் தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் உயிரிழந்ததாகக் கூறினார்.
இந்த பகுதியில் இதுபோல பலமுறை நடந்திருப்பதாகவும், தடுப்புக் கம்பிகள் அமைத்து இந்த பகுதிக்கு மக்கள் செல்வதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் கோரியுள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
கவனக் குறைவாகச் செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, ஆசிரியர்கள் இப்ராகிம், திலகவதி ஆகியோர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

